வியாழன், 11 மார்ச், 2010

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...
பேருந்தில் செல்வது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் இன்னும் ரொம்ப பிடிக்கும்.என்னையே மறந்து கனவு உலகத்தில் புகுந்து விடுவேன்(கண்களை விழித்துக் கொண்டு தான்). ஆனால் அதனால் எத்தனை தொல்லைகள் ...

மே மாதம் பரீட்சை வருகிறது. எங்கள் M.D வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் அலுவலகத்தில் வேலை இருக்காது. கிடைக்கும் நேரத்தில் படிக்கலாமே என்று நினைத்து நேற்று அலுவலகத்திருக்கு செல்லும் போது என் புத்தகத்தையும் எடுத்து சென்றேன்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்தில் கிளம்பினேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் என் புத்தகத்தை ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னேன். பேருந்தில் இருந்த மற்றொரு பெண் தன் காதல் கதையை அவள் தோழியிடம் சொல்லி கொண்டு வந்தாள். நானும் அந்த கதையை சுவாரசியமாக கேட்டுகொண்டே வந்தேன். பிறகு நான் இறங்கும் நிறுத்தம் வந்ததும் இறங்கிவிட்டேன். வாங்கிய பயண சீட்டையும் தூக்கி போட்டு விட்டு அந்த பெண்ணின் காதல் கதை நினைத்து கொண்டே அலுவலகம் வந்து விட்டேன்.

அலுவலகம் வந்த பின் தான் ஞாபகம் வந்தது என் புத்தகத்தை பேருந்திலே ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு வந்தது. ஒரு பத்து நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பின்னர் ஒரு வழியாக நார்மலுக்கு வந்து என்ன பண்ணுவது என்று யோசித்தேன்.

நான் ஏறிய பேருந்து பெயர் - தெரியாது.

டிக்கெட் - கிடையாது.

நான் யாரிடம் புத்தகம் கொடுத்தேன் - தெரியாது.

நான் புத்தகம் கொடுத்த பெண் எங்கு போகிறாள் - தெரியாது.

எனக்கு தெரிந்து எல்லாம் அந்த பேருந்து எங்கு போகும் என்பது மட்டுமே. ஆனால் அந்த ரூட்டில் (பால்பண்ணை வழியாக ) 5 நிமிடதிருக்கு ஒரு முறை ஒரு தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் செல்லும்.

உடனே மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் சென்றேன்.2,3 பேருந்து நடத்துனரிடம் 9.45மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் பேருந்து எது என்று கேட்டு அந்த தனியார் பேருந்தின் பெயரை தெரிந்து கொண்டேன். பின்னர் நானே அது மீண்டும் பேருந்து நிலையம் வரும் நேரத்தையும் கணித்து கொண்டு, இறைவனையும் வேண்டி கொண்டு காத்திருந்தேன். சரியாக என் கணிப்பு படி 12 மணிக்கு அந்த பேருந்து, சத்திரம் வந்தது.

நல்ல வேலை அந்த பெண் என் புத்தகத்தை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சென்றிருந்தாள். எப்போதும் போல நடத்துனரும் படிக்கிற பெண் கவனமாக இருக்க கூடாத ன்னு சில அறிவுரைகள் கூறினார்.

அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் தான் நெறைய கதைகளும், கனவுகளும் எனக்கு வருகிறது

முன்னொரு முறை அப்படி தான் பேருந்தில் முதல் இருக்கையில் உட்கார்ந்து முதல் நாள் பார்த்த படத்தை பற்றி கனவு கண்டு கொண்டு இருந்தேன். திடீரென்று திரும்பி பார்த்தால் ஓட்டுனரும், நடத்துனரும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். ஒன்றும் புரியாமல் பின்னால் திரும்பி பார்த்தால் பேருந்தில் ஒருத்தர் கூட இல்லை. வண்டி சத்திரம் பேருந்து நிலையத்திருக்கு வரும் சற்று முன்னதாகவே எல்லாரும் இறங்கிய பின்னர் ஓட்டுனரும், நடத்துனரும் என்னை இறங்க சொல்லி இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு இருக்கிறார்கள்.. வெட்கத்தோடு வண்டியை விட்டு வேகமான இறங்கினேன்.

இன்னோர் முறை சமயபுரம் போகும் போது நடத்துனரிடம் ஐம்பது ருபாய் கொடுத்து டிக்கெட் கேட்டேன். அவர் மீதி பணத்தை இறங்கும் போது தரேன் என்றார். நானும் சரி என்று இது போல ஒரு கனவு உலகத்துக்கு போய்விட்டேன். சமயபுரம் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கி பேருந்து போன பிறகு தான் மீதி பணத்தை வாங்க வில்லை என்று தெரிந்தது. நல்ல வேலை அப்போது டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்தேன். பின் சத்திரம் பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து வந்ததும் நடத்துனரிடம் மீதி பணமும் , திட்டும் பெற்று கொண்டேன்.

அனுபவங்கள் இதோடு முடியுமோ அல்லது இன்னும் கிடைக்குமோ தெரியலை.....