செவ்வாய், 1 செப்டம்பர், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - ஸ்ரீரங்கம் - அழைப்பு 3


ஓம் நமோ நாராயண

பூ என்றால் அது தாமரை மலரையும்
கோவில் என்றால்
சைவத்திருக்கு (சிவன்) சிதம்பரமும்
வைணவத்திற்கு (பெருமாள்) திரு அரங்கத்தையும் குறிக்கும்.
வைணவ த்திருத்தலங்களுக்கெல்லாம் முழு முதன்மையானது ஸ்ரீரங்கம் ஆகும். அதனால் தான் இங்கு இருக்கும் பெருமாளை 'பெரியவர்' என்றே அழைப்பர் வைணவர்கள்.

கோபுர வாசல்கள் மொத்தம் ஏழு. முதல் மூன்று வாசல்களில் வீதிகள், குடியிருப்புகள், கடைகள் இருக்கும், அடுத்த நான்கு வாசல்களும் கோவிலுக்கு உரித்தானவை.


இக்கோவிலுக்கு மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன.


அதில் முதல் கோபுரமான ராஜா கோபுரம் ஆசியாவிலே இரண்டாவது மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது. இது 17 ம் நூற்றாண்டிலே கட்ட ஆரம்பிக்கப் பட்டாலும் 1987 ம் ஆண்டு தான் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோபுரத்தீன் கீழ் நிற்கும் போதும் குளிந்த காற்று நம்மை வருடிச் சென்று மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்கும் நிலை ஆனந்தமானது.


அக்காலத்தில் மன்னர்கள் ஏன் பெரிய பெரிய கோவில்களை கட்டி, அதனை பராமரிக்க பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றனர்?
1. அக்காலத்தில் சிற்பம், ஓவியம், இயல், இசை, நாடகம், போன்ற பல கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன. அதனால் தான் கோவிலுக்கு போகும் போது குளித்துவிட்டு சுத்த பத்தமா, நல்லா ஆடைகள் அணிந்து போகணும் ன்னு சொல்லுவாங்க. ஏனெனில் பல கலைகளுக்கும் புகலிடமாக இருக்கும் இடத்தில் நம் உடல் துர்நாற்றத்தினால் கலைகளை ரசிக்க வருபவர்கள் பாதிக்க கூடாதுன்னு தான் அப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாம் இறைவன் அருள் பெற மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும்

சிறிய கோவில்களே கலைகளுக்கு புகலிடமாக இருந்த போது ஸ்ரீரங்கம் இருந்திருக்காதா?
கட்டுத் தரிக்கும் கவிபாடும் திறன் கொடுத்த நம் கம்பர் இங்குதான் தனது அழியா காவியமான கம்ப ராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த மண்டபம் இதோ..


இந்த மண்டபத்தை பார்க்கும் போது கம்பனின் புகழ் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக 'எப்பேர்ப்பட்ட கவிஞன் தான் அழியாக் காவியத்தை அரங்கேற்றிய இடம்' என்ற நினைவு வரும். அப்போது கைகள் தானாக அவ்விடத்தை தொட்டு பார்க்க ஆசைப்படும்

கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன
கலைகளுக்கு தலைவனாக இறைவன் இருக்கிறான்
.

அதனால் தான் இன்னும் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள்(A.R. ரகுமான், இளையராஜா, விஸ்வநாதன்..), பாடகர்கள்(SPP, ஜேசுதாஸ், நித்யஸ்ரீ ...) பலரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 2

எத்தனை வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள். இவற்றில் எல்லாம் நீர் இருக்கும் போது எவ்வளவு அழகு எங்கள் திருச்சி.

இத்தனை புகழுக்கும் சொந்த காரர் ஒருவரே. அவர் தான் மாமன்னர் கரிகாலச் சோழர். கல்லணையை கட்டியவர் நாடு சிறப்புற நீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல் படுத்தியவர். அப்போது உறையூர் தான் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது.

மேலும் அக்கால மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்களையும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் இந்நாளில் யாரால் செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழுடைய கோவில்கள் அல்லவா அவைகள்? தலை நகரத்திற்குரிய அழகு என்றும் அழியாத அழகாய் இன்றும் அக்கோவில்கள் திருச்சியை அழகு படுத்திகொண்டு இருக்கின்றன.

ஆறுகளையும், குளங்களையும் வெட்டியதும் கோவில்கள் கட்டியதும் சோழ மன்னர்களாக இருந்தாலும், பின்னாளில் வந்த பல மாமன்னர்கள் அதாவது, பாண்டிய மன்னர்களும், பல்லவ மன்னர்களும் கோவில்களை மேலும் பெரியதாகவும், சிறப்புடையதாகவும் வளர்த்தனர் என்பது இக்கோவில்களில் உள்ள தூண்களையும் , சிற்பங்களையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம்.