வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 1


நீங்க ஒரு ஆன்மீகவாதியாகவோ , ரசனையாளராகவோ இருந்தால் எங்க ஊர் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

பழம்பெரும் காலத்தில் சிலப்பதிகாரத்தில் பாட பட்ட பாடல் இது.

காவிரி பெண் கன்னி பருவம் வந்ததும் தன் காதலனோடு சேர குதுகலத்துடனும், பூரிப்புடனும் வாருவாள். அப்போ அவளுக்கு குயில்கள் காதல் பாட்டிசைத்தும் செவிலி தாய்மார்களான புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் மஞ்சள், சிவப்பு வண்ண மலர்களை சூடி, பச்சை பட்டுடித்தி, பல மணங்களால் அவளை மேலும் அழகு படுத்தியும் காவிரி பெண்ணை சந்தோசப்படுத்தி சந்தோசப்பட்டனர். சந்தோஷம் அவளுக்கு மட்டும் தானா? அவள் போகும் இடமெல்லாம் பஞ்சம் என்னும் பகைவனை அழித்துக் சென்றதால் மக்களும் அல்லவோ சந்தோசத்தில் இருந்தனர்.

அதனால் தானே சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வியும், ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி குந்தவைக்கூட
'இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லை! எனக்கு திருமணம் ஆனாலும் நான் சோழ நாட்டை விட்டு போவதில்லை' என்று சபதம் எடுத்துக் கடைசிவரை அதுபோலவே வாழ்ந்து காட்டினாள்

இன்று அந்த செவிலி தாய்மார்களை நாம் கொன்றதலோ என்னவோ காவிரி பெண்ணுக்கு எங்கள் ஊர் பக்கம் வர பிடிக்காமல் மேகமாகி நேரிடையாக தன் மணாளனோடு சேர்கிறாள்.

என்ன இருந்தாலும் அவள் தாய் அல்லவா? அதான் வருடத்தில் சில நாட்கள் மட்டுமாவது வந்து நம்மை வாழ வைக்கிறாள்.

ஆனாலும் இன்றும் திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் ஆறு, வாய்க்கள்,குளங்கள், குட்டை கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் அழகு மழைகாலங்களிலும், காவிரி தாயின் வருகையின் போது மட்டுமே தெரிகின்றன.

மற்ற நேரங்களில் தாயில்லா குழந்தைகளை போல அழுக்காகவும், கவனிப்பார் அற்றும் இருக்கும்.